அமைச்சரவையில் இன்னும் 2 இடங்களே பாக்கி! எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகத்திற்கு வாய்ப்பிருக்கிறதா?
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்னும் 2 இடங்களே மீதமிருக்கும் நிலையில், அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்புக்கு வழங்குவதில் சாத்தியமில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகம் (C. V. Shanmugam) தரப்புக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தவெக அரசுக்கு வெளிப்புற ஆதரவு அளித்த அ.தி.மு.க. அதிருப்தி அணிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே 10 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், விஜய் ( Vijay) முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் முதல் கட்டமாக பதவியேற்றனர். அதன் பின்னர் இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்தம் 35 பேருக்கு அனுமதி உள்ள நிலையில், தற்போது 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மீதமுள்ள இரண்டு இடங்கள் யாருக்கு வழங்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.300 கோடி மோசடி செய்த நபருடன் போட்டோ! வெடித்தது சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
இந்த சூழலில், தவெக அரசுக்கு சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.வின் சில எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவின. குறிப்பாக சி.வி. சண்முகம் அணியினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசியல் பேச்சுகளும் எழுந்தன. ஆனால் அதற்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொல்.திருமாவளவன் (Thol. Thirumavalavan) தலைமையிலான விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என எச்சரித்திருந்தன. இதையடுத்து, அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவை இடமில்லை என தவெக தரப்பு உறுதி அளித்ததாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று வெளியான அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில் எந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பெயரும் இடம்பெறவில்லை. மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்று விசிகக்கும் மற்றொன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்படலாம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதனால், கூட்டணி சமநிலையை காக்கும் அரசியல் கணக்கோடு விஜய் நகர்கிறார் என்ற மதிப்பீடு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு வாய்ப்பளித்தால்..! முதல்வர் விஜய்க்கு செக்... சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை..!