கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!
கேஸ் சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது. அச்சம் தேவையில்லை. தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுங்கள் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் பரவி வரும் நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் பாதுகாப்பாகவும் தடையின்றியும் தொடர்கிறது என்று உறுதியளித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டு, சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் முன்கூட்டியே சிலிண்டர் முன்பதிவு செய்து வருவதால் தேவை அதிகரித்து, விநியோகத்தில் சிறு தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்ந்து சீராக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். சில வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே முன்பதிவு செய்வதை புரிந்துகொள்கிறோம்.
இதையும் படிங்க: கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!
ஆனால், இதுபோன்ற முன்கூட்டிய மற்றும் அத்தியாவசியமற்ற முன்பதிவுகள் தேவையை தற்காலிகமாக அதிகரித்து, டெலிவரி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒரு சிறிய நடவடிக்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுங்கள். அச்சம் தேவையில்லை – எங்கள் ஊழியர்களும் விநியோகஸ்தர்களும் உறுதியுடன் பணியாற்றி வருகின்றனர். வீடுகளுக்கு சிலிண்டர்கள் தொடர்ந்து சென்றடையும்.”
இந்த அறிக்கை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 'நந்தா தேவி' உள்ளிட்ட எல்பிஜி டேங்கர்கள் வந்தடைந்த பின்னணியில் வெளியாகியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, இறக்குமதி நெருக்கடி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளித்து வருவதால், வணிக ரீதியான சிலிண்டர் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வீடுகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பீதி அடையாமல், தேவைக்கு ஏற்ப மட்டும் இண்டேன் ஆப் அல்லது ஐஓசிஎல் இணையதளம்/ஆப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விநியோக அமைப்பு சீராக இயங்கி, எல்பிஜி விலை உயர்வு அல்லது தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. போர் பதற்றம் தொடரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!