குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!
குடும்பப் பிரச்சினையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் ஆகஸ்ட் 12 அன்று நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது
குடும்பப் பிரச்சனை காரணமாக நிலுவையில் உள்ள வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் இடையே சென்னை உயர் நீதிமன்றச் சமரசத் தீர்வு மையத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு தீர்வும் எட்டப்படாததால், இருவரையும் மீண்டும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றச் சமரசத் தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரைத் தாக்கியதாகப் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தை அணுகித் தீர்வு காண உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரின் சகோதரர் தரப்பில் ஏற்கனவே 2 முறை சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அந்த இரு பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் 3-வது முறையாக இன்று சமரசத் தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரின் சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நேரில் ஆஜராகிச் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையிலும் இரு தரப்பிற்கும் இடையே எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, பேச்சுவார்த்தையை ஒத்திவைத்த சமரசத் தீர்வு மையம், மீண்டும் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய குலோத் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!