சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை! தமிழக மக்களுக்கு இந்தியன் ஆயில் இயக்குனர் அசோகன் முக்கிய வேண்டுகோள்!
போர் பதற்றம் குறைந்தால், வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங் நாட்களில் மாற்றம் வரும் என என அசோகன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் வி.சி. அசோகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தற்போதைய கையிருப்பு மற்றும் விநியோக முறைகள் குறித்து அவர் விரிவாக விளக்கமளித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தடையின்றி, பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தியன் ஆயில், பி.பி.சி.எல், எச்.பி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் போதிய அளவு எல்.பி.ஜி இருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் முன் பதிவு (Panic Booking) செய்வதைத் தவிர்க்க வேண்டும்" என அசோகன் கேட்டுக்கொண்டார்.
வணிக ரீதியான சிலிண்டர் விநியோகத்தில் அரசு வழிகாட்டுதலின்படி 70 சதவீத விநியோகம் அத்தியாவசியத் துறைகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னுரிமைத் துறைகள்: மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள், கல்லூரி விடுதிகள் மற்றும் தொழிற்சாலை உணவகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையான 52 ஆயிரம் மெட்ரிக் டன்னில், 30 ஆயிரம் மெட்ரிக் டன்னை பொதுத்துறை நிறுவனங்களே வழங்கி வருகின்றன.
இதையும் படிங்க: நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!
தற்போது நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. சர்வதேச அளவில் போர் பதற்றம் தணிந்து, நிலைமை சீரானால் இந்த புக்கிங் கால அளவு குறைக்கப்படும். இது தேசிய அளவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என அசோகன் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த மக்களின் நலன் கருதி, 5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர்களின் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுடன் இணைந்து தொழிலாளர் குடியிருப்புகளில் நேரடி விநியோகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை உடனுக்குடன் கண்காணித்து வருவதாகவும், பொதுத்துறை நிறுவன விநியோகஸ்தர்கள் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அதே சமயம், பல ஹோட்டல் நிறுவனங்கள் தற்போது பி.என்.ஜி (Piped Natural Gas) பயன்பாட்டிற்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!