ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளரின் பெயரை முறையான விசாரணையின்றி தன்னிச்சையாக நீக்க முடியாது என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள் குறித்து, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ்., இன்று விரிவாக விளக்கமளித்தார். ‘குறிப்பாக, எவ்வித நடைமுறையுமின்றி பெயர்கள் நீக்கப்படுவதாக எழும் புகார்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகச் சோழிங்கநல்லூர் நீடிக்கிறது. அதனைத் தொடர்ந்து பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய தொகுதிகள் அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளன. சுமார் 97 லட்சம் வாக்குகள் வரைவுப் பட்டியலில் குறைந்துள்ள நிலையில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை (தற்போது 75,000) மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, "வாக்குச்சாவடிகளின் சீரமைப்பு ஏற்கனவே ஒரு முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும்" என்று அவர் பதிலளித்தார்.
பெயர்கள் நீக்கம் குறித்துப் பேசிய அவர், "எந்த ஒரு வாக்காளரின் பெயரையும் முறையான விசாரணையின்றி தன்னிச்சையாக நீக்க முடியாது. இதற்கெனத் தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு (ERO) தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் கணக்கீட்டுப் படிவங்களை வழங்க மறுத்த சுமார் 12,000 பேர் என மூன்று பிரிவுகளின் கீழ் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒருவர் கணக்கீட்டுப் படிவத்தை வழங்கியிருந்தால், அவரைச் சரியான நடைமுறையைப் பின்பற்றாமல் நீக்கவே முடியாது" என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்!
மேலும், இதுவரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து வழிகளிலும் சேர்ந்து 5,19,275 புதிய விண்ணப்பங்கள் (Form 6) வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். "பொதுமக்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்க அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களிலும் லிங்க் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ஆம் தேதி வரை வரப்பெறும் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய விசாரணை நடத்தித் தீர்வு காணப்படும். பூத் வாரியாகச் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்" என்று கூறினார். 6.4 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில், ஒவ்வொரு வாக்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் திடீர் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை!