×
 
☰

அக். 15-க்கு பின் வெப்பம் படிப்படியாக குறையும்! சென்னை வானிலை மையம் முக்கிய தகவல்!

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 முதல் 21 தேதிக்குள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பிறகு வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும், அக்டோபர் 15 முதல் 21-ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் வி.ஆர். துரை, தமிழகத்தின் தற்போதைய வெப்பச் சலனம் மற்றும் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை குறித்த முக்கியக் கணிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கம் காரணமாக வளிமண்டலத்தில் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே நடப்பு அக்டோபர் மாதத்திலும் வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக நிலவுகிறது. குறிப்பாக, சமீபத்தில் நிறைவடைந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது என்று விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை! முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம்!

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை குறித்துப் பேசிய அவர், அக்டோபர் 15-ஆம் தேதிக்கு மேல் மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும். தமிழகத்திற்கு அதிக மழையைத் தரும் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15 முதல் 21-ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான வானிலை சாதகமான சூழல் தற்போது நிலவி வருகிறது என்று குறிப்பிட்டார்.

மழைப்பொழிவு பரவல் குறித்துக் குறிப்பிட்ட இயக்குநர், இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தென் தமிழகப் பகுதிகளில் இயல்பான அளவு அல்லது இயல்பை விடக் கூடுதலாக மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், வட தமிழகப் பகுதிகளில் இயல்பான அளவை விட சற்று குறைவாக மழை பதிவாகக்கூடும் என்று தெரிவித்தார்.

கோடை காலத்தைப் போல அக்டோபர் மாதத்திலும் வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், அக்டோபர் 15-க்குப் பிறகு வெப்பம் தணிந்து பருவமழை தொடங்கும் என்ற வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதீத வெப்பம்..! எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கலாம்... புதிய ஆய்வில் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share