×
 

"பனைத் தொழிலாளர்களை தாக்கி பொய் வழக்கு"..! சீமான் கடும் கண்டனம்..!

பனை தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாக சீமான் தெரிவித்தார்.

திருச்சி காவல்துறையினர் பனைத்தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ள நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

‘கள்’ இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் திருச்சி காவல்துறையினர் சிறையில் அடைத்து வைத்திருப்பது கொடுங்கோன்மை என்றார். மருத்துவக் குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்க கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தபடும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது என கூறினார். 

உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனித தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறினார். 

இதையும் படிங்க: தேர்தல் பொதுக்கூட்டம்... நாம் தமிழர் வேட்பாளர் மீது பாய்ந்த வழக்கு..!! வந்தவாசியில் பரபரப்பு..!

 இலால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்டதற்காக, பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பனைத் தொழிலாளர்களையும் தமிழ்நாடு காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share