எதுக்கு எங்கள ஏமாத்துறிங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 12,000 முதல் 13,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 12,500 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக, பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 377-வது வாக்குறுதியாக, உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது.
ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பகுதி நேர ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலை கைவிட மறுத்து போலீசார் உடன் மல்லு கட்டினர். சாலைகளில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது, 12,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கூறியும் முழக்கங்களை எழுப்பினர். பகுதி நேர ஆசிரியர்களின் மறியல் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் எதிரே வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையும் படிங்க: கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!
இதையும் படிங்க: இதுவரைக்கும் 3,347 முடிஞ்சியிருக்கு... அறநிலையத்துறை செய்த தரமான சம்பவம்... பதறும் பாஜக...!