ஏப்.23ம் தேதி சம்பளத்துடன் லீவு கட்டாயம்..!! பறந்தது உத்தரவு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 234 தொகுதிகளுக்கும் இந்த நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தல் வியாழக்கிழமை நாளில் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மே 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று அனைத்து வாக்காளர்களும் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அறிவிக்கப்படும். அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், ஏப்ரல் 23 அன்று தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. நெருங்கும் தேர்தல்..!! தமிழகத்திற்கு 327 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!
இந்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135B பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாக்குரிமை பெற்றுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் தேர்தல் நாளில் ஊதிய இழப்பு இன்றி விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஊதியத்தில் எவ்விதக் கழிவும் செய்யக்கூடாது. வேலைக்கு வராததால் ஊதியம் குறைக்கப்பட்டால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும்.
மேலும், இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தொழிலாளர் நலத் துறை இதை கண்காணித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தனியார் துறை ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். ஏனெனில், பலர் தங்கள் ஊதிய இழப்பு காரணமாக வாக்களிக்கத் தவறிவிடும் சூழல் இருந்தது. இப்போது, ஊதியத்துடன் விடுமுறை கிடைப்பதால், அதிக அளவில் வாக்களிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் தங்கள் ஓட்டுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. தனியார் நிறுவன உரிமையாளர்கள் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இனிமே NO TENSION..! ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்... தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி..!!