வெங்காய விலை உயர்வுக்கு செக்! ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை! சூப்பர் அறிவிப்பு!
இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சமையலுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு மத்தியில், ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த மாத இறுதியில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து கிலோ ரூ.60 வரை விற்பனையாகிறது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை வெளிச்சந்தையில் அதிகரிக்கும் காலங்களில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் சில பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போதைய வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி! விலை உயர்வுக்கு செக்!
இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி கூறுகையில், பொதுமக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான நாபெட்டிடம் இருந்து முதல் கட்டமாக 70,000 கிலோ வெங்காயம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மத்திய அரசிடம் இருந்து வெங்காயம் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார். வெளிச்சந்தை விலையைவிட குறைவாக, ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40-க்குள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் தற்போது காய்கறி சந்தையில் அதிகரித்துள்ள வெங்காய விலையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அன்றாட சமையலில் வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்தும் நடுத்தர மற்றும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
எனினும், ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை எப்போது தொடங்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் எவ்வளவு அளவு வழங்கப்படும், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நேரத்தில் கிடைக்குமா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
வெங்காய வரத்து அதிகரித்தால் சந்தை விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. அதுவரை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை வழங்கும் அரசின் நடவடிக்கை, விலை உயர்வால் சிரமப்படும் பொதுமக்களுக்கு தற்காலிக நிவாரணமாக அமையுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை!