×
 

கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டத்தின் மலைவாசஸ்தலமான ஊட்டிக்கு இயக்கப்படும் புகழ்பெற்ற மலை ரயில், சுற்றுலா பயணிகளின் இதயத்தை கவர்ந்திழுக்கும் அற்புதமான அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்வது என்பது பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கனவாக உள்ளது. எனினும், அதிக கோரிக்கை காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் கடினமாக இருப்பதால், பலர் ஏக்கத்துடன் காரில் பயணம் செய்து ஊட்டியை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோடைக்காலத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயில்2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த மலை ரயில், இமயமலை ரயிலுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

செங்குத்தான மலைப்பகுதியில் ஏறுவதற்காக உலகளவில் பிரசித்தி பெற்ற 'ரேக் அண்ட் பினியன்' (Rack and Pinion) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் ஒரே ரயில் இதுவாகும். இந்த தொழில்நுட்பம் ரயிலை மிகுந்த பாதுகாப்புடன் மலையேற்ற அனுமதிக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு செல்ல சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். மறுமார்க்கமாக ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வர சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. வழக்கமான மலை ரயில் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. 

இதையும் படிங்க: ஊட்டியில் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்... மரணத்தின் விளிம்பிலிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு...!

பயணத்தின் சிறப்பம்சங்கள்: இந்த மலை ரயில் பயணத்தில் 250-க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 16 சுரங்கப்பாதைகளை கடந்து செல்ல வேண்டும். கல்லார், ஹில் குரோவ், குன்னூர் மற்றும் லவ்டேல் உள்ளிட்ட நிலையங்கள் இயற்கை எழிலுடன் கூடிய அழகான இடங்களாக விளங்குகின்றன. ரயிலில் பயணம் செய்யும் போது மலைப்பகுதியின் பசுமையான காட்சிகள், அருவிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மேகங்களுக்கு இடையில் பயணிக்கும் அனுபவம் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும்.

டிக்கெட் முன்பதிவு: இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் IRCTC இணையதளம் மூலம் நீண்ட நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். கடைசி நேர பயணத்திற்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பொது டிக்கெட் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டைப் பெற பலர் ஒரு நாள் முழுவதும் இரவு பகல் காத்திருக்கும் அளவுக்கு இந்த ரயில் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கோடைக்கால சிறப்பு ரயில் அட்டவணை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மார்ச் 27 முதல் ஜூலை 5 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இதன்படி, நேற்று (மார்ச் 27) முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் காலை முதலே ரயில் நிலையத்திற்கு வந்து, உற்சாகத்துடன் பயணத்தை தொடங்கினர்.

மலை ரயிலில் அமர்ந்தபடி இயற்கையின் அழகை ரசித்தபடி சென்றனர். அதேபோல், ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 28 முதல் ஜூலை 6 வரை சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு சேவை கோடைக்கால சுற்றுலாவை மேலும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக மலை ரயில் பயணத்தை எதிர்பார்த்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வடமாநில மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... தேர்வுக்கு உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share