சகதிக்குள் புதைந்த அரசு பேருந்து! வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்ட மாணவிகள்! மீட்புப் பணியில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
அப்போது பர்லியாறு பகுதியில் அரசு பேருந்து சகதிக்குள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டனர். பேருந்துக்குள் இருந்து நடத்துநரின் குரல் கேட்டதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பர்லியாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு பேருந்து மண்ணிலும் சகதியிலும் சிக்கியதில் ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தார். பேருந்துக்குள் சிக்கியிருந்த நடத்துநர் கேசவன் உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் உடனடியாக வெளியுலகிற்குத் தெரியாத நிலையில், சுற்றுலா முடித்துவிட்டு ஊர் திரும்பிய பள்ளி மாணவிகளை மீட்கச் சென்ற அதிகாரிகள் மூலமாகவே பேருந்து மண்ணில் புதைந்திருந்தது தெரியவந்தது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தனர். நான்கு பேருந்துகளில் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் ஓட்டுநர்கள் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
சுற்றுலா முடித்துவிட்டு இரவு ஊர் திரும்பியபோது, கல்லாறு பகுதியில் உள்ள சோதனைச் சாவடி அருகே சாலையில் மரங்கள் விழுந்து கிடந்ததால் பேருந்துகளால் தொடர்ந்து செல்ல முடியவில்லை.
இதனால் எட்டு ஆசிரியைகள், 78 மாணவிகள் இரவு நேரத்தில் மலைப்பாதையில் தவித்தனர். அவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்காததால், வாட்ஸ்அப் மூலம் தாங்கள் எதிர்கொண்ட சிரமம் குறித்து தகவல் அனுப்பினர்.
மேலும், கூகுள் மேப் மூலம் தாங்கள் இருக்கும் இடத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் அவசரக் காவல் உதவி எண் 100-ஐத் தொடர்புகொண்டு கல்லாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது பர்லியாறு பகுதியில் அரசு பேருந்து சகதிக்குள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டனர். பேருந்துக்குள் இருந்து நடத்துநரின் குரல் கேட்டதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சகதிக்குள் சிக்கியிருந்த பேருந்தை மீட்டு, உயிரிழந்த ஓட்டுநர் ஜனகராஜின் உடலை அதிகாரிகள் மீட்டனர். இதற்கிடையே, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கயிறுகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குன்னூரைச் சேர்ந்த சரக்கு லாரி ஓட்டுநர் மோசினும் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதே பர்லியாறு பகுதியில் கடந்த 7ஆம் தேதி மலையிலிருந்து உருண்ட பாறை கார் மீது விழுந்ததில் முன்னாள் விமானப்படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!