×
 
☰

உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மலைப்பாதைகளில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், மண்சரிவும் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சில சுற்றுலாத் தலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழையால் தொடரும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இதையும் படிங்க: நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

கொடைக்கானல் மற்றும் உதகை மலைப்பகுதிகளிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மலைப்பாதைகளில் உள்ள பல இடங்களில் மழைநீர் அருவிபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு 2 நாள் அறிவுறுத்தல்

தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு வரத் திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் இன்றும் நாளையும் தங்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உதகைக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டவர்கள், தற்போதைய வானிலை மற்றும் சாலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தலங்கள் முன்னெச்சரிக்கையாக மூடல்

கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மழை மற்றும் மண்சரிவு அபாயம் நீடிப்பதால், சுற்றுலாப் பயணிகள் மூடப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பர்லியார் அருகே மண்சரிவு: பேருந்து சிக்கியது

உதகை அருகே பர்லியார் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மண்சரிவு காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகளையும் போக்குவரத்து நிலவரத்தையும் அறிந்து பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

இதையும் படிங்க: நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share