×
 

தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

சட்டமன்ற கூத்துகளைச் சபாநாயகர் தடுக்க வேண்டும் என்றும் தைரியமிருந்தால் முதல்வர் அந்த பைல்களைத் திறக்க வேண்டும் என்றும் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் வித்தைக்காரன் மாதிரி உள்ளே ஆடுது காலி வேடிக்கை பாடி என்று பேசாமல், தம்மிடம் இருப்பதாகச் சொல்லும் 3 ரகசியக் கோப்புகளை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாகத் திறந்து காட்ட வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் அதைத் திறக்காவிட்டால் அவையில் தவறான தகவலைப் பதிவு செய்ததற்காக முதலமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய சட்டமன்றத்தின் போக்குகள் மற்றும் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

முதலமைச்சர் தம்மிடம் 3 கோப்புகள் இருப்பதாகக் கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கெனவே சவால் விட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், மோடி மஸ்தான் வேலை காட்டுவது போல் பயங்கரம் உள்ளே இருக்கிறது எனப் பூச்சாண்டி காட்டக் கூடாது; நாங்களே அனுமதி கொடுத்த பிறகும் திறக்கத் தயங்குவது ஏன்? எல்லா விவகாரங்களுக்கும் முந்திரிக்கொட்டை போல முன்னால் வந்து பதில் சொல்லும் துறை அமைச்சர்கள், இப்போது இதற்குப் பதில் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் எனச் சாடினார்.

இதையும் படிங்க: சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பாட்டுப் பாடுவதும், கேலி கிண்டல் செய்வதும் சபையின் மாண்பைக் குலைப்பதாகக் குறிப்பிட்ட துரைமுருகன், சட்டமன்றத்திற்குச் செல்பவர்களுக்கு மரபும் தெரியவில்லை, சட்டமும் தெரியவில்லை; விதிகள் அடங்கிய புத்தகத்தை வாங்கிப் படித்தார்களா என்றே தெரியவில்லை. இந்த கூத்தையெல்லாம் சபாநாயகர் தான் கண்டித்துத் தடுத்து நிறுத்த வேண்டும்; பாவம் அவர் மேலே உட்கார்ந்து கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்றார். 

மேலும், சபைக்குள் மாமன், மச்சான் உறவுக்கெல்லாம் இடமில்லை; எதிர்க்கட்சிக்காரன் வாளோடு வந்தால் ஆளுங்கட்சிக்காரன் கேடயத்தோடு வந்து தடுக்க வேண்டும்; சபை என்பது சமரசமில்லாத அரசியல் போர்க்களம் எனத் தனது 50 ஆண்டுகால சட்டமன்ற அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் விவகாரம் குறித்துப் பேசிய அவர், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கெனவே மூன்று, நான்கு கார்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அரசு செலவில் கார் வழங்க வேண்டிய அவசியமே இல்லை என்று மக்கள் கருதுவதாகக் குறிப்பிட்டார். 

கஜானா காலியாக இருக்கிறது என்று கூறிவிட்டு எம்.எல்.ஏ-க்களுக்குக் கார்களும், ஓட்டுநர்களுக்கு ரூ.25,000 சம்பளமும் கொடுக்கும் அரசு, நகரத்தைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். 

இறுதியாக, திமுக எத்தனையோ பிளவுகளையும் சோதனைகளையும் கடந்து வந்த இயக்கம் என்றும், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டார்கள் என்றும் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இனி அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை வரும்! திமுகவை விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்! அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share