“விவசாயிகள் மீது அடக்குமுறையா?” கறிக்கோழி பண்ணையாளர்கள் கைதுக்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம்!
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தக் கோரிப் போராடி வரும் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளைப் பொய் வழக்குகளில் கைது செய்துள்ள திமுக அரசைக் கண்டித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கறிக்கோழி பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைச் செவிமடுத்துக் கேட்காமல், அவர்களைக் கைது செய்து ஒடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஒரு கிலோ கறிக்கோழிக்கு வெறும் 6 ரூபாய் 50 காசுகள் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. தீவன விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்தக் கூலியை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து வரும் ஜனவரி 21-ஆம் தேதி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளைப் பொய்ப் புகார்களின் அடிப்படையில் காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "நாங்க எப்போவுமே ஒண்ணுதான்!" தினகரன் உடனான நெருக்கம் குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில்!
சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டிடிவி தினகரனின் அமமுக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தனது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். "மக்களாட்சியில் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளின் குரல்வளையை நசுக்கும் செயலில் விடியா அரசு ஈடுபடக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, விவசாயிகளின் கூலி உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் இந்தப் போராட்டம் காரணமாகத் தமிழகத்தில் கோழி இறைச்சி விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: "ஓபிஎஸ், டிடிவி குறித்து இபிஎஸ்-உடன் பேசவில்லை" - நயினார் நாகேந்திரன் விளக்கம்!