காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி
தமிழக காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து 'ஆர்டர்லிகள்' உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாகப் பொறுப்பு டிஜிபி அபய் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் வீடுகளில் தனிப்பட்ட பணிகளுக்காக 'ஆர்டர்லிகளாக' நியமிக்கப்பட்டிருந்த காவலர்களை உடனடியாகத் திரும்பப் பெறும்படி, தமிழகப் பொறுப்பு காவல்துறைத் தலைவர் (பொறுப்பு டி.ஜி.பி.) அபய் குமார் சிங் அவர்கள் அதிரடிச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
காவல்துறையின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் காவலர்களின் அசல் பணியை உறுதி செய்யும் நோக்குடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் 'ஆர்டர்லிகளாக'ப் பணியாற்றும் காவலர்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். திரும்பப் பெறப்படும் இந்தக் காவலர்களை உடனடியாக அவர்களது அசல் போலீஸ் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துக் காவல்துறை உயர் அதிகாரிகளும் ஆர்டர்லிகளாகப் பணியமர்த்தப்பட்ட காவலர்களின் விவரங்களைத் தொகுத்து, அவர்களை அவரவர் பிரிவுகளுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி மாற்றம்: வெங்கட்ராமனுக்குப் பதில் அபய்குமார் சிங் நியமனம்!
நீண்ட காலமாகவே, காவல்துறைக் காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீடுகளில் சமையல், துணி துவைத்தல் போன்ற தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது குறித்துப் பொதுமக்களிடமிருந்தும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த அதிரடி உத்தரவின் மூலம், பணியிடப் பற்றாக்குறையைப் போக்கவும், காவல்துறைச் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!