பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!
முக்கியமான சட்டப் பிரச்னைகளில் அவரது ஆலோசனைகள் தமிழக அரசுக்கு உதவக்கூடும் என்றும், எனவே இந்த நியமனத்தை அரசியல் சர்ச்சையாக பார்க்க தேவையில்லை என்றும் சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
புதுடெல்லி: தமிழக அரசின் முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் தொடர்பான தகவல் கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்ட விதம் குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசின் முக்கிய சட்ட விவகாரங்களில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக சிதம்பரத்தை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதற்கான அரசாணை வெளியான பின்னரே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த நியமனம் தொடர்பாக சிதம்பரத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என ராகுல் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு வேணுகோபால், இந்த விவரம் குறித்து தனக்கு தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுலுக்கு ‘செக்’ வைத்த அதானி சந்திப்பு? கர்நாடக முதல்வர் சிவகுமாரின் விளக்கம் என்ன?
பின்னர், ஒரு எம்.பி. மூலம் சிதம்பரத்திடம் இதுகுறித்து விசாரிக்கப்பட்டதாகவும், அப்போது நியமனம் குறித்து தனக்கே தற்போது தான் தெரியவந்ததாக சிதம்பரம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழக அரசு சிதம்பரத்தின் ஒப்புதலை பெற்ற பின்னரே அவரை இந்த பொறுப்பில் நியமித்ததாக பின்னர் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் மீண்டும் ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் கடும் அதிருப்தி தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியின் தரப்பிலோ அல்லது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரத்திலோ விரிவான விளக்கம் வெளியாகவில்லை.
இதற்கிடையே, சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் இந்த நியமனத்தை வரவேற்றுள்ளனர். மத்திய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ள சிதம்பரத்தின் நிர்வாக மற்றும் சட்ட அனுபவம் தமிழக அரசுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான சட்டப் பிரச்னைகளில் அவரது ஆலோசனைகள் தமிழக அரசுக்கு உதவக்கூடும் என்றும், எனவே இந்த நியமனத்தை அரசியல் சர்ச்சையாக பார்க்க தேவையில்லை என்றும் சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால், சிதம்பரத்தின் சட்ட நியமனம் ஒருபுறம் கவனம் பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான தகவல் கட்சிக்குள் எவ்வாறு பகிரப்பட்டது என்ற விவகாரமும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யா? ராகுல் காந்தியா? 2029-ல் பிரதமர் யார்? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பேச்சு!