அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் தொடரும்! பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பாக்., அறிவிப்பு!
ஈரான் உடான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஈரான் உடன் அமெரிக்கா நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை பாகிஸ்தான் தொடரும் என்று அறிவித்துள்ளது. இந்த முக்கியமான தகவல் உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர் தொடங்கியது. தொடர்ந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 8ஆம் தேதி அறிவித்தார். இந்தப் போரை முழுமையாக நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது.
ஏப்ரல் 10ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஈரான் மற்றும் அமெரிக்கக் குழுக்களை இஸ்லாமாபாத் வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி ஏப்ரல் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப்பேச்சு!! பாக்., மத்தியஸ்தம்!! இஸ்லாமாபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு!
இருப்பினும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த போதிலும், அமெரிக்கா - ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுகளைத் தொடர்ந்து எளிதாக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 24 மணி நேரப் பேச்சுகளுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், “இஸ்லாமாபாத் தீவிரமான மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்கு மத்தியஸ்தம் செய்தது. நானும் ராணுவத் தலைமைத் தளபதியும் இரவு முழுவதும் பல சுற்றுப் பேச்சுகளுக்கு வழிவகுத்தோம்” என்றார்.
மேலும், “சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும். வரும் நாட்களில் தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று இஷாக் தார் உறுதியளித்தார்.
1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற முதல் நேரடி சந்திப்பாக இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்புக்கும் இடையே அணு ஆயுதத் திட்டம், பொருளாதாரத் தடைகள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட பல்வேறு விவாதத்துக்குரிய பிரச்சினைகள் இருந்ததால் முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தத் தோல்வியும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சியும் மத்திய கிழக்கு அமைதிக்கான நம்பிக்கையை இன்னும் உயிரோட்டமாக வைத்துள்ளது. உலக நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: அமைதி பேச்சுக்கு வாய்ப்பில்லை!! ஈரான் பிடிவாதம்! புதிய நிபந்தனைகளால் அமெரிக்கா அப்செட்!