×
 

BREAKING! துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்ஸிங்! அதிருப்தி!

காலை 9 மணி ஆன பின்னும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வராததால், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்ட பின் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருவிழாவின் முக்கிய அங்கமாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஜனவரி 15) அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16 அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைப்பதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 7.30 மணிக்கு தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 8.30 மணியைக் கடந்தும் துணை முதலமைச்சர் வராததால் பார்வையாளர்களும், மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் பெரும் எதிர்பார்ப்புடனும் சற்று பதற்றத்துடனும் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: உதய்ணா!! ரொம்ப தப்புண்ணா!! எப்போ சார் துவக்கி வைப்பீங்க! பாலமேடு மக்கள் ஆதங்கம்!

கடைசி நேரத்தில் தங்கள் காளைகளை களமிறக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் காளை உரிமையாளர்கள் மிகுந்த கவலையுடன் இருந்தனர். இறுதியாக காலை 9 மணி ஆன பின்னர், துணை முதலமைச்சர் வராத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். அதன்பிறகு கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாகத் தொடங்கியது.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி பெற்ற வீரமிகு காளைகள் ஒவ்வொன்றாக களத்திற்கு விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி காளைகளை அடக்கினர். களத்தில் உருவான உற்சாகமும், ஆரவாரமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

இந்தப் போட்டியில் 1,000 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். முதல் 11 சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவர்.

ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர்களின் பெயர்கள் LED திரையில் உடனுக்குடன் தெரியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார், சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு டிராக்டர் உள்ளிட்ட பெரும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாமதமாகத் தொடங்கிய போதிலும், உற்சாகமும் பாரம்பரிய ஆவேசமும் நிறைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அலங்காநல்லூருக்கு ஸ்டாலின்! பாலமேட்டில் உதயநிதி! மதுரை ஜல்லிக்கட்டில் கொட்டப்போகும் பரிசு மழை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share