#BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!
பழனி நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர்களில் ஒருவரான சேதுபதியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 12 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நில மோசடி வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக இன்று அதிகாலை 3 பேரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் மணத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த 60 வயதான வெள்ளத்துரை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நிலத்தை வாங்கியவர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே கைது... பழனி நில மோசடியில் அதிரடி திருப்பம்... முக்கிய புள்ளி உட்பட 3 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தண்டபாணி மடத்தின் வாரிசுதாரர் என போலியாகக் கூறி, அறக்கட்டளை உருவாக்கி நிலத்தை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவைச் சேர்ந்த அன்வர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பத்திரப்பதிவில் சாட்சியாக கையெழுத்திட்டவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை கைது செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய முன்ஜாமீன் காரணமாக அவர் இரண்டு முறை மட்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இவர்களுக்கு எதிராக கைதானவர்களின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், ஜஸ்டின் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதியை சிபிசிஐடிபோலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். தற்போது பழனி அருகே டி.கே.என். புதூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தென்மண்டல எஸ்பி சாஜிதா தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!