×
 

ரூ.100 கோடி!! பழநி முருகன் கோவில் நில விவகாரத்தில் அதிரடி... ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!

பழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு அதிரடி உத்தரவிட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயரில் பதிவு செய்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பத்திரப்பதிவு செல்லாது என அறிவித்து, தனி நீதிபதி வழங்கிய முந்தைய உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்க மறுத்த சார்பதிவாளரின் உத்தரவை எதிர்த்து சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சார்பதிவாளரின் மறுப்பு உத்தரவை ரத்து செய்து, சொத்து விற்பனைப் பத்திரத்தை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி இரண்டு தனிநபர்களின் பெயரில் அந்த நிலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. கோவிலுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் உயர்மதிப்புள்ள நிலம் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்ட செய்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி சகோதரர் மீதான நடவடிக்கையில் ஏன் தாமதம்? 3 வருஷமா நிலுவையில் உள்ள வழக்கு? ஐகோர்ட் காட்டம்!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதைத் தொடர்ந்து, பத்திரப்பதிவை மேற்கொண்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பழநி கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதுடன், வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் செயல் அலுவலரும், மடத்தின் தக்கருமான அதிகாரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அந்த நிலத்தின் பத்திரப்பதிவு சட்டப்படி செல்லாது என்றும் தெளிவுபடுத்தியது. இந்த தீர்ப்பு கோவில் சொத்துகள் தொடர்பான வழக்குகளில் முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து தாரைவார்ப்பு?!! அறநிலையத்துறை உத்தரவால் சலசலப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share