×
 

பழனி நில மோசடி விவகாரம்... ஓயாத பிரச்சனை..! முன்ஜாமின் கேட்டு வெள்ளதுரை மனு..!!

பழனி நில மோசடி விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் வெள்ளத்துரை முன்ஜாமின் கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுடன் தொடர்புடைய தண்டபாணி மடத்திற்கு சொந்தமான சுமார் 1.4 ஏக்கர் நிலம், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த நிலம் 1888-ல் ஒரு தான நன்கொடையாக கோவில் மடத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தை விற்கவோ, மாற்றவோ கூடாது என்ற நிபந்தனையுடன் அது அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மோசடியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படும் நபர்களில் ஒருவர் உடுமலை அருகே பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளதுரை. அவருடன் பழனியைச் சேர்ந்த சேதுபதி, விற்பனையாளராகக் குறிப்பிடப்படும் முருகதாஸ் ஆகியோரும் தொடர்புடையவர்கள். இந்த நிலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையான மதிப்பு மிக அதிகம் என்பதால், இது திட்டமிட்ட மோசடியாகக் கருதப்படுகிறது. 

பழனி கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த முறைகேட்டை அறிந்து, புகார் அளித்தனர். இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் எஸ். முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளதுரை மற்றும் சேதுபதி ஆகியோர் மீது போலி ஆவணங்கள் உருவாக்குதல், ஏமாற்றுதல், சொத்து அபகரிப்பு, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்... திமுக நிர்வாகி வீட்டிலும் சிபிசிஐடி சோதனை... பரபரப்பு..!!

மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த விவகாரத்தில் முக்கியத் தீர்ப்பு வழங்கியது. கோவில் நிலத்தின் பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்தது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைக்கு உட்பட்ட இடைக்கால முன் ஜாமின் வழங்கியது. அவர் சிபிசிஐடி அலுவலகத்தில் சில நாட்கள் நேரில் ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

வெள்ளதுரை, சேதுபதி, முருகதாஸ் ஆகிய மூவரும் வழக்கு பதிவான பிறகு தலைமறைவாக உள்ளனர். சிபிசிஐடி போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வெள்ளதுரையின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் பதிவுத் துறை அதிகாரிகள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் பதிவாளர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளதுரை முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபராக கருதப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளதுரை முன்ஜாமின் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி... சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின்..! அதிரடி நடவடிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share