பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி... களமிறங்கிய சிபிசிஐடி.. அடுத்தடுத்து சிக்கப் போவது யார்?
இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவர்மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு மோசடி பின்னணியில் உள்ள அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர்.
பழனி தண்டபாணி சுவாமிகள் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததாக எழுந்த புகாரில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அடிவாரம் பூங்கோ ரோட்டில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடம், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம், அன்னதானம் மற்றும் பல்வேறு மதச் சேவைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையாகும். ஆனால், தண்டபாணி சுவாமிகள் மறைவுக்குப் பிறகு மடத்தின் சொத்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அந்த இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்த முயற்சிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தின் மூலம் மடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னர், பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தக்கராக நியமிக்கப்பட்டு, மடத்துக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களுக்காக இலவச வாகன நிறுத்த வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!
இந்த சூழலில், மடத்துடன் தொடர்பில்லாத நபர் ஒருவர், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு இருவரின் பெயரில் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இந்த பதிவு முறைகேடாக நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இணை ஆணையர் மாரிமுத்து பதிவுத்துறை மற்றும் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் மற்றும் நிலம் வாங்கியதாக கூறப்படும் இருவர் மீது மோசடி, சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முதல் கட்டமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், மாவட்ட பதிவாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை கோரி ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, ஜூலை 17 வரை அவரை கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மோசடியில் தொடர்புடைய அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!