தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!
பழனி அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் – விளையாட்டுத்தனமாக செய்ததாக 11 வயது சிறுவர்கள் இருவர் மீது விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவர்கள் இருவர் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்டபோது, பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டியில் மலம் போன்ற பொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், குடிநீர் தொட்டியை அகற்றி சுத்தம் செய்துள்ளனர். இதற்கிடையே, சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு... மூடி மறைந்த தலைமையாசிரியர்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!
இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விளையாட்டுத்தனமாக செய்ததாக போலீசார் தகவல். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் போன்ற பொருள் இருந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
விசாரணையில், பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவர்கள் இருவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் எந்த உள்நோக்கமும் இன்றி விளையாட்டுத்தனமாக இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், சிறுவர்கள் இருவர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING பழனி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... பெண் உட்பட மேலும் 2 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி போலீஸ்...!