×
 

பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பழனி கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்கள் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாகக் கூறி, அப்போதைய பொறுப்பு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் வெள்ளத்துறை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோரை சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி நால்வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மனுதாரரான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஜூலை 6 முதல் 11 வரை மட்டுமே பொறுப்பு சார் பதிவாளராகப் பணிபுரிந்தேன். முந்தைய சார் பதிவாளர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலப் பதிவை முழுமையாக முடிக்காமல் சென்றிருந்த நடைமுறையை மட்டுமே நான் நிறைவு செய்தேன். சம்பந்தப்பட்ட நிலப் பிரச்சினை தனிநபர்களுக்கும் அறநிலையத்துறைக்கும் இடையிலானது. இதில் சார் பதிவாளரின் பங்கு மிகக் குறைவு. எனக்கு இருதய அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாலும், ஏற்கனவே 13 நாட்களாகச் சிறையில் உள்ளதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இந்த மனுக்கள் நீதிபதி முரளிசங்கர் அமர்வில் தீவிர விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் நிலங்களை அபகரிப்பதற்காகத் திட்டமிட்டு இந்த மெகா மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது; இதில் தொடர்புடைய பின்னணி நபர்களை முழுமையாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டியுள்ளதால் மனுதாரர்களுக்கு எக்காரணம் கொண்டும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று காரசாரமாக வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் உடல்நலக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், சொத்து தனியார் மடத்திற்குரியது என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பளித்த நீதிபதி முரளிசங்கர், மோசடியின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துறை, சேதுபதி மற்றும் முருகதாஸ் ஆகிய நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடி எதிரொலி.. சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share