×
 

விடைபெறும் பாம்பன் பாலம்: 111 கால வரலாற்றுப் பொக்கிஷத்தை அகற்றும் பணி தீவிரம்!

இந்தியாவின் முதல் கடல் பாலமான 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள், இன்று நடைபெற்ற பூமி பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.

தமிழகத்தின் மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையுணைக்கும் வரலாற்று அடையாளமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள், இன்று நடைபெற்ற பூமி பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை கொண்ட இந்தப் பாலம், சுமார் 111 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்து தற்போது விடைபெறுகிறது. புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பழைய பாலத்தின் பாகங்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளன.

1914-ஆம் ஆண்டு 'செஷர்ஸ் பாலம்' என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் திறக்கப்பட்டு, ரயில் போக்குவரத்துத் தொடங்கியது. கடலின் நடுவே கப்பல்கள் செல்வதற்காகத் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப் பாலம் அமைக்கப்பட்டதே இதன் தனிச்சிறப்பாகும். 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட கோரப் புயலில் இந்தப் பாலம் சேதமடைந்தாலும், மீண்டும் சீரமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, 2020-இல் தொடங்கப்பட்ட புதிய பாலப் பணிகள் நிறைவடைந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா அபார வெற்றி: முதல் டி-20 போட்டியில் வீழ்ந்தது நியூசிலாந்து.. அபிஷேக் ஷர்மா அதிரடி!

மத்திய அரசின் 'ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்' (RVNL) நிறுவனம் இந்தப் பாலத்தை அகற்றும் பணியை மேற்கொள்கிறது. சுமார் 2.3 கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் தூக்குப் பாலம், தண்டவாளங்கள் மற்றும் இதர பாகங்களை 2.81 கோடி ரூபாய் செலவில் அகற்ற ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பாலத்தைச் சேதமின்றி அகற்றுவதற்காக, பாலத்தின் தூண்களுக்கு ஒன்றிலிருந்து வரிசையாக எண்கள் இடப்பட்டுள்ளன. இந்த எண்களின் அடிப்படையில், பாலத்தைப் படிப்படியாக அடுக்கடுக்காக வெட்டி எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை அடுத்த 4 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நூறாண்டுகளைக் கடந்த இந்தப் பாலத்தின் பாகங்களைச் சிதைக்காமல் ரயில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே வலுத்துள்ளது. பாம்பன் கடற்பரப்பில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கம்பீரமாக நின்ற இந்தப் பாலம் அகற்றப்படுவது, அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஒருவிதப் பிரிவாற்றாமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாய்னா நேவால் ஓய்வு: இந்தியப் பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share