×
 

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!! வெற்றிவேல்!! வீர வேல்!! பக்தர்கள் சரண கோஷம்!

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக பழமுதிர்சோலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை நடைபெற்றது.

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. பல மாதங்களாக நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த புனித விழாவில் பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.

மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள பழமுதிர்சோலை முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. ஜூன் 30-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள் பல்வேறு வேத மந்திரங்களுடன் நடைபெற்றன. அதன் நிறைவாக இன்று காலை சுமார் 6 மணியளவில் திருக்குட நன்னீராட்டு மற்றும் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்திருந்தன. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்ததுடன், 'அரோகரா' முழக்கங்கள் விண்ணை முட்டின.

இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க, தெறிக்க கொடூரம்.. ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் சரமாரியாக வெட்டி சாய்ப்பு...!

பழமுதிர்சோலை முருகன் கோவிலின் தனிச்சிறப்பாக, முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். ஆறுபடை வீடுகளில் வேறு எங்கும் காண முடியாத இந்த அரிய தரிசனம், இந்தத் தலத்தின் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், ஒளவையாரிடம் முருகப்பெருமான் "சுட்ட பழமா, சுடாத பழமா?" என்று கேட்டு திருவிளையாடல் புரிந்ததாக நம்பப்படும் புகழ்பெற்ற நாவல் மரமும் இந்தக் கோவிலில் உள்ளது.

கோவிலைச் சுற்றியுள்ள மலையில் நூபுர கங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோவில், அனுமன் தீர்த்தம், கருட தீர்த்தம் உள்ளிட்ட பல புனித இடங்கள் அமைந்துள்ளன. அரிய மூலிகைகள் நிறைந்த இந்த மலைப்பகுதியில் இன்றும் சித்தர்கள் தவம் செய்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழமுதிர்சோலை கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகமும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது.

இதையும் படிங்க: அப்படி ஒரு திட்டமே இல்ல! செங்கோட்டையன் சொன்னது தப்பு! பதட்டத்தில் பேசிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share