×
 

மெரீனாவுக்கு போகாதீங்க..!! கொந்தளிக்கும் கடல் அலைகள்.. வீசும் சூறாவளிக்காற்று..!! மக்களுக்கு வார்னிங்..!!

டிட்வா புயலால் பலத்த காற்று வீசி வருவதாலும், கடல் சீற்றம் இருப்பதாலும் பொதுமக்கள் மெரினாவுக்கு செல்ல 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழ்நாடு கடற்கரையை நெருங்கி வருவதால், சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால், பிரபலமான மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்தது. ஆனால் மேக கூட்டங்கள் இல்லாததால் மழையை கொடுக்க முடியவில்லை. தற்போது இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது. இது இன்று பிற்பகல் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், கடலூர், காரைக்காலுக்கு 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திற்கு 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இதையும் படிங்க: இலங்கைக்கு துணை நிற்போம்..!! உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயார்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

டிட்வா புயல் கரையை கடக்காமல் கடலோர பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்தாலும் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

டிட்வா புயல், புயலாகவே தமிழக கடற்கரைக்கு வந்ததால் நேற்று காலை முதலே பட்டினம்பாக்கம், மெரினா, நீலாங்கரை, திருவான்மியூர், காசிமேடு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகள் கொந்தளித்தன. இங்கெல்லாம் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருந்தது. பல அடி உயரத்திற்கு எழும்பின. அது போல் ஆளைத் தள்ளும் அளவுக்கு காற்றும் வீசி வந்தது. இதனால் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி கடற்கரைக்கு செல்வோரை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும் வருகை தருவது வழக்கம். ஆனால், புயலின் தாக்கத்தால் இரு நாட்களாக கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். "புயலின் தீவிரம் குறையும் வரை இந்தத் தடை தொடரும். பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், மீனவர்களுக்கு கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: புஸ்வானமான 'டிட்வா' புயல்..!! தமிழக கடற்கரைக்கு லேட்டா தான் வருமாம்..!! என்ன இப்படி ஆகிடுச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share