“போலீஸ் வாகனத்தின் மீது குண்டுவீச்சு!” - பெரம்பலூரில் ரவுடி அழகுராஜ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
பெரம்பலூரில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற பிரபல ரவுடி அழகுராஜ், காவல்துறையினரால் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி அழகுராஜ், காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்க முயன்ற ரவுடியின் இந்தத் துணிகரத் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, மற்றொரு ரவுடியான வெள்ளைக் காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, அழகுராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளைக் காளியைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அழகுராஜைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அழகுராஜைப் பெரம்பலூர் அருகே போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, அவர் மீண்டும் தனது கைவரிசையைக் காட்ட முயன்றார். வாகனத்தில் இருந்தவாறே காவல்துறையினரைத் தாக்கித் தப்ப முயன்ற அவர், மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்துத் தான் வந்த வாகனத்தின் மீதே வீசித் தாக்குதல் நடத்தினார். இந்தத் திடீர் மோதலில் அழகுராஜ் தாக்கியதில், பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு காவலருக்கு அறிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கல்லத்தி மரம் தர்காவுக்கு சொந்தமா? திருப்பரங்குன்றத்தில் H. ராஜா தடுத்து நிறுத்தம்… போலீசாருடன் கடும் வாக்குவாதம்..!
காவலரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாலும், ரவுடி தப்பிச் செல்வதைத் தடுக்கவும் வேறு வழியின்றி காவல்துறையினர் தற்காப்பிற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அழகுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காவலர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடியின் ஆட்டம் என்கவுன்ட்டரில் முடிவுக்கு வந்திருப்பது குற்றவாளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஜனநாயகன்” பட சென்சார் வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு!