மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த நியூசிலாந்து அமைச்சர்! சுற்றிக் காமித்தார் பியூஸ் கோயல்!
நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்லே மற்றும் அவரின் மனைவி நாடின் மெக்லேவை மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அவரின் மனைவி சீமா கோயல் தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றிக்காட்டினர்.
ஆக்ரா: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் (Free Trade Agreement) நாளை (ஏப்ரல் 27) கையெழுத்தாக உள்ள நிலையில், மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அவரது மனைவி சீமா கோயல், நியூசிலாந்து வணிகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டாட் மெக்லே மற்றும் அவரது மனைவி நாடின் மெக்லே ஆகியோர் இன்று தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தனர்.
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு இரு நாட்டு அமைச்சர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ரசித்தனர். பியூஷ் கோயல், நியூசிலாந்து அமைச்சருக்கு தாஜ்மஹாலின் வரலாறு, இந்திய கட்டிடக்கலை மற்றும் சுற்றுலா தளங்கள் குறித்து விளக்கினார். இரு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று தாஜ்மஹாலை ரசித்த காட்சிகள் இனிமையான தருணங்களை ஏற்படுத்தின.
நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்லே அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார். நாளை இரு நாடுகளும் கையெழுத்திட உள்ள தடையற்ற வணிக ஒப்பந்தம், இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற ஒப்பந்தம்!! நாளை கையெழுத்து! பியூஸ் கோயல் தகவல்!
தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்: “இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வணிக ஒப்பந்தம் ஏப்ரல் 27ஆம் தேதி கையெழுத்தாக உள்ளது. இந்தப் பயணம் நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான பொதுவான பார்வையை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை 2025 மார்ச் மாதம் தொடங்கி, டிசம்பர் 2025இல் முடிவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்தில் வரி விலக்கு அளிப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாஜ்மஹால் சுற்றுலாவின்போது பியூஷ் கோயல், ஆக்ரா நிர்வாகம், பாதுகாப்புப் படையினர் மற்றும் வழிகாட்டிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த சுற்றுலா, வணிக உறவுக்கு அப்பால் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார ரீதியான நெருக்கத்தையும் வலுப்படுத்தியுள்ளது.
நாளை டெல்லியில் நடைபெற உள்ள ஒப்பந்தக் கையெழுத்து விழாவில் இரு நாட்டு வணிக அமைப்புகளின் பிரதிநிதிகள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமையும் என்று இரு தரப்பும் நம்புகின்றன.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற ஒப்பந்தம்!! நாளை கையெழுத்து! பியூஸ் கோயல் தகவல்!