×
 

பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் பயன்படுத்த கூடாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாளை மறுநாள், ஆகஸ்ட் 15ம் தேதி அன்று, இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாட உள்ளது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை நினைவுகூரும் இந்த நாள், இந்திய மக்களின் தியாகம், ஒற்றுமை மற்றும் வீரத்தைப் பறைசாற்றுகிறது. நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இந்நாளை சிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த உரையில், நாட்டின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பேசுவார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொடியேற்றுதல், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் தேசபக்தி நிகழ்வுகள் நடைபெறும். 

இதையும் படிங்க: டாக்காவில் நடந்த கோர விபத்து.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு..!!

தமிழ்நாட்டில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சுதந்திர தினம், “விக்சித் பாரத்” (வளர்ந்த இந்தியா) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இது 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் புரட்சிகரமான திட்டங்களை எடுத்துரைக்கிறது. பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை இந்தக் கருப்பொருளின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு கல்வித்துறை, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியக் கொடியின் மாண்பை காப்பாற்றும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்தும்போது, அவை காகிதம் அல்லது துணியால் ஆனவையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கொடிகள் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிப்பதோடு, மக்காத தன்மை காரணமாக மண்ணையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. இதனால், பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசியக் கொடியின் மரியாதையை உயர்த்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வழிகாட்டுதலில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேசியக் கொடியை மரியாதையுடன் கையாளுவது குறித்து கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சள் துணி பைகள், காகித உறைகள் மற்றும் மரப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.

இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: "ப" வடிவ இருக்கை இங்க சரிப்பட்டு வராது.. திமுக அரசுக்கு தமிழிசை வலியுறுத்துவது என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share