×
 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக்கு தடை கோரி வழக்கு: கொலீஜியம் மீது புகார்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்காகக் கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்துள்ள பட்டியலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமன நடைமுறையில் அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் நடந்துள்ளதாகவும், தற்போதைய கொலீஜியம் அமைப்பே சட்டப்படி சரியானதாக இல்லை என்றும் மனுதாரர் தனது மனுவில் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிபதிகள் நியமனப் பரிந்துரையில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம், அண்மையில் மேற்கொண்ட பரிந்துரைகள் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு முரணானவை என அவர் வாதிட்டுள்ளார்.

குறிப்பாக, உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான ஜெ. நிஷா பானு அவர்களைப் பங்கேற்கச் செய்யாமல் இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி நிஷா பானு கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட உத்தரவைப் பெற்றிருந்த போதிலும், அங்குப் பொறுப்பேற்கும் வரை அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவே தொடர்வார் என உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்துகின்றன. அத்தகைய நிலையில், அவரை விடுத்து நான்காவது மூத்த நீதிபதியுடன் கொலீஜியம் அமைத்தது 'தலைமை நீதிபதி + இரண்டு மூத்த நீதிபதிகள்' என்ற அடிப்படை கோட்பாட்டை மீறுவதாகும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “மத்திய அரசு அளித்த மானியம் வருமானமல்ல!” - ஆவின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

மேலும், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களில் பலர் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் தனித்துவத்தையும் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள வழக்கறிஞர் பிரேம்குமார், தற்போதைய பரிந்துரைப் பட்டியலுக்குத் தடை விதிக்கவும், முறையான கொலீஜியம் அமைப்புடன் இதனை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share