×
 

விவசாய இலவச மின்சாரத்தில் தட்கல் முறை ரத்தாகுமா? ₹2,431 கோடி தணிக்கை குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தில் தட்கல் முறையை ரத்து செய்யவும், வசூலான ₹2,431 கோடி நிதி தணிக்கை குறித்தும் விளக்கமளிக்க மின்சாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகளை வழங்கும் 'தட்கல்' முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் தட்கல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ₹2,431 கோடி நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தொடரப்பட்ட வழக்கில், வசூலிக்கப்பட்ட தொகை முறையாகத் தணிக்கை செய்யப்பட்டதா என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசின் மின்சாரத் துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டில் விவசாயப் பெருமக்களுக்கு இலவச விவசாய மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், தட்கல் முறையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பெருந்தொகையைச் செலுத்தும் விண்ணப்பதாரர்கள் மட்டும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஏழை, எளிய மற்றும் சிறு, குறு விவசாயிகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னுரிமை பெறுகின்றனர். 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, தட்கல் திட்டத்தின் கீழ் மொத்தம் 89,289 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து சுமார் ₹2,431.51 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 44,993 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன; லட்சக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பிறகும் 44,296 விண்ணப்பதாரர்களுக்கு இணைப்புகள் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையும் படிங்க: எல்லாம் நடிப்பா?... விஜய் ஆட்சியில் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை... போராடினால் இதுதான் கதியா?

மேலும் அந்த மனுவில், வசூலிக்கப்பட்ட ₹2,431 கோடி இமாலய நிதி எந்தக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது? அதன் பயன்பாடு என்ன? வழங்கப்பட்ட இணைப்புகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை மற்றும் மீதமுள்ள நிதி எவ்வாறு அரசின் கணக்கில் காட்டப்பட்டுள்ளது என்ற எந்தவொரு வெளிப்படைத் தன்மையும் இல்லை. இத்திட்டம் அரசு விதிகளின்படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் மூலம் சிறப்புத் தணிக்கை செய்ய வேண்டும். 

தட்கல் இணைப்புகளைப் பெற்ற 44,993 பயனாளிகள் பற்றிய முழு விவரங்களும் பொதுவெளியில் மறைக்கப்பட்டுள்ளதால், தகுதியற்ற தனி நபர்கள் பல இணைப்புகளை முறைகேடாகப் பெற்றுள்ளனரா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது; குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் தட்கல் விவசாய மின் இணைப்புகளைப் பெற்று அதனைப் பிறருக்கு விற்றுப் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, ஏழை விவசாயிகளை வஞ்சிக்கும் தட்கல் முறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தமிழ்நாடு மின்வாரியத் தரப்பு வழக்கறிஞர், இதுகுறித்து மின்வாரியத் துறை உயர் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்; திட்டத்திற்கான முறையான தணிக்கைப் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன; எனவே அரசு தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட இமாலய தட்கல் கட்டணத் தொகை முறையாகத் தணிக்கை செய்யப்பட்டதா என்பது குறித்து மின்சாரத் துறை முதன்மைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியோர் தங்களது விரிவான விளக்கங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் எதிரொலி! தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share