பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!
பிரதமர் மோடி சென்னை வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காகச் சென்னை பெருநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிவப்பு மண்டலம் (Red Zone): பிரதமர் வந்து இறங்கும் மீனம்பாக்கம் விமான நிலையம், அவர் தங்கும் கிண்டி ராஜ்பவன் பகுதி மற்றும் அவர் பயணிக்கும் விவிஐபி வழித்தடங்கள் அனைத்தும் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களுக்குச் சென்னை பெருநகரில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி ஊர்திகள் (UAV), பாரா கிளைடர்கள், ஹாட் ஏர் பலூன்கள் மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் மைக்ரோ லைட் ஏர் கிராஃப்ட்கள் பறக்க விடுவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு கருதிச் சென்னையில் மார்ச் 24 முதல் மே 22 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி இந்தத் தடை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!
ஏப்ரல் 3 (வெள்ளி) பிற்பகலில் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் இரவு மீண்டும் சென்னை திரும்பித் தங்குவார்.
ஏப்ரல் 4 (சனி): காலையில் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், பின்னர் மயிலாப்பூர் பகுதியில் தனது கட்சி வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து தி.நகர் அல்லது நகரின் முக்கியப் பகுதியில் 'ரோடு ஷோ' (Roadshow) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் பாதுகாப்புப் பணியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் மீனம்பாக்கம் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!