பிரதமர் மோடிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய கவுரவம்.. 5 நாடுகளுக்கு பயணம்.. அசத்தல் ப்ளான்..!
கானா, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
கானா, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக, ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டுக்கு இன்று செல்கிறார். 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு, டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டுக்கு செல்கிறார்.
பிரேசிலுக்கு ஜூலை 5ம் தேதி செல்லும் மோடி, 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இறுதிக்கட்டமாக, நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அவர் ஜூலை 9ம் தேதி டில்லி திரும்புகிறார்.
முதலில் அவர் ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு செல்கிறார். இன்றும் நாளையும் கானா நாட்டில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கானா நாட்டின் அதிபர் ஜான் டிராமணி மஹாமாவை (John Dramani Mahama) சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றி மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். தொழில், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!
பிரதமர் மோடி கானா நாடடு பார்லிமென்டில் உரையாற்றுகிறார். இது, ஆப்பிரிக்க நாட்டில் மோடிக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய மரியாதையாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக டிரினிடாட் அன்ட் டொபாகோவுக்கு செல்லும் பிரதமர் மோடி 3, 4 ஆகிய தேதிகளில் அங்கு நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
ஜனாதிபதி கிறிஸ்டின் கார்லா கங்காலூ (Christine Carla Kangaloo) பிரதமர் கம்லா பெர்சாட் பிஸ்ஸசர் (Kamla Persad-Bissessar) ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது பற்றி பேச்சு நடத்துகிறார்.
பிரதமர் மோடி செல்லும் 3வது நாடு அர்ஜென்டினா. 57 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். தலைநகர் பியூனஸ் அயர்சில் ஜேவியர் மிலேயை (Javier Milei) சந்திக்கிறார். அப்போது நடக்கும் இரு தரப்பு பேச்சு வார்த்தையில், விவசாயம், எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா –அர்ஜென்டினா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறினர்.
அர்ஜென்டினாவில் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரேசில் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். 6, 7 ஆகிய தேதிகளில் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் பயங்கரவாததை வேரறுக்க பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாடு முடிந்ததும் தலைநகர் பிரேசிலியா செல்லும் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை (Luiz Inácio Lula da Silva) சந்தித்து பேச்சு நடத்துகிறார். கடந்த 60 ஆண்டுகளில் பிரேசிலியா நகருக்கு செல்லும் முதலாவது இந்திய பிரதமர் என்ற சிறப்பை மோடி பெறுகிறார்.
மோடி சுற்றுப்பயணம் செல்லும் கடைசி நாடு, நமீபியா. 8 ம்தேதி நமீபியா செல்லும் அவர், அந்நாட்டின் முதல் பெண் அதிபரான நெடும்போ நந்தி-நதைத்வாவை (Netumbo Nandi-Ndaitwah) சந்தித்து பேச்சு நடத்துகிறார். நமீபியா பார்லிமென்ன்டின் கூட்டுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
5 நாடுகளில் 8 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு,9ம் தேதி டில்லி திரும்புகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஒரே நேரத்தில் 5 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வது இது 2-வது முறை. 2016-ல் அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய 5 நாடுகளில் ஒரே நேரத்தில் மோடி சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துள்ளத் துடிக்க கொன்னுட்டு சாவகாசமா "சாரி" ! போட்டோ ஷூட் எப்ப நடக்கும்? முதல்வரை பந்தாடிய நயினார்..!