×
 

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தைப் பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் சர்வதேச 'பிரிக்ஸ்' (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் இருதரப்பு உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள் நூலை வழங்கிப் பிரதமர் மோடி கௌரவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி புதுடெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள சூழலில், இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பிரதமர் நரேந்திர மோடி தனியாகச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, இந்தியா - ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவு, ராணுவப் பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தித் துறைகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின் உச்சக்கட்டமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் புத்தகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புப் பரிசாக வழங்கி உலகத் தலைவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தமிழ் கலாச்சாரத்தையும் செம்மொழித் தமிழின் அடையாளமான திருக்குறளையும் சர்வதேசத் தலைவர்களிடம் கொண்டு சேர்ப்பதைத் தொடர்ந்து வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த நிகழ்வு குறித்துத் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் தமிழில் உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

அவர் வெளியிட்டுள்ள தமிழ்ப் பதிவில், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பில், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசளித்தேன். திருக்குறளானது தேச எல்லைகள் மற்றும் மொழிகளைக் கடந்து நிற்கக்கூடிய திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தையும் பேரறிவையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது" என்று புகழாரம் சூட்டியுள்ளார். உலக வல்லரசு நாட்டின் தலைவரான விளாடிமிர் புதினுக்குத் தமிழ் மறையான திருக்குறள் பரிசளிக்கப்பட்டதும், அது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவிட்டதும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share