நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..! காரணம் இதுதான்..!!
பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் இதில் 4 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தினர் உள்பட 69 பேர் மாயமாகினர். 1,200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 11) உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதாகும்.
இதையும் படிங்க: உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி! பாஜகவினரை ஆஹா…ஓஹோ… என புகழ்ந்த செங்கோட்டையன்
உத்தரகாண்டில் கடந்த சில வாரங்களாக இயற்கைப் பேரிடர்கள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேம்படுத்தவும் பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். பிரதமர் மோடி, உத்தரகாண்டின் தலைநகர் டெஹ்ராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு செப்டம்பர் 11 மாலை வருவார். அங்கு, மாலை 4:15 மணியளவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு உயர்மட்ட மறுஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இந்தக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உயர் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் பங்கேற்பர். இந்தக் கூட்டத்தில், பேரிடர் நிவாரணத் திட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரபிரதேசம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பிரதமரின் வருகைக்கு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் ஆய்வு செய்தார். மாநில அரசு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், மறுகட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பிரதமரின் இந்தப் பயணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமையும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன், பிரதமர் மோடி உத்தரகாண்டின் உத்தரகாசி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் குறித்து தனது சுதந்திர தின உரையில் கவலை தெரிவித்திருந்தார். இந்தப் பயணத்தின் மூலம், மத்திய அரசின் ஆதரவை உறுதிப்படுத்துவதோடு, பேரிடர் மேலாண்மையில் மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை மோடி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பஞ்சாப்.. ரூ.1,600 கோடி நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு..!!