×
 

மொத்தமே 2.45 மணி நேரம் தான் டைம்! பிரதமர் மோடியின் தமிழக வருகை! அதிரடியாக மாற்றப்பட்ட ப்ளான்!!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ஆம் தேதி சென்னை வருவதை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு குழு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இது தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான என்டிஏவின் முதல் பெரிய பிரச்சார நிகழ்ச்சியாக அமையவுள்ளது.

பிரதமர் மோடி இந்நிகழ்ச்சிக்காக மிகக் குறைந்த நேரத்தை ஒதுக்கியுள்ளார் – 3 மணி நேரத்திற்கும் குறைவானது. சாலைப் பயணத்தை முற்றிலும் தவிர்த்து, சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலமே பயணிக்க உள்ளார். 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 2:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை வந்தடைவார்.

இதையும் படிங்க: மோடி வர்றதுக்கு முன்னாடியே முடிச்சிரணும்!! பக்கா ப்ளான் போடும் பியூஸ்! அதிமுக - பாஜ கூட்டணி விறுவிறு!

பின்னர், மதியம் 2:25 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் ஏறி, பிற்பகல் 3 மணிக்கு மதுராந்தகத்தில் நேரடியாக தரையிறங்கி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார். இக்கூட்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி சிறப்புரை ஆற்ற உள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உட்பட என்டிஏ கூட்டணியின் மூத்த தலைவர்கள் பலரும் மேடையில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் இறுதி அமைப்பு மற்றும் ஒப்பந்த விவரங்கள் மேடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் முடிந்தவுடன், மாலை 4:30 மணிக்கு அதே ஹெலிகாப்டரில் மதுராந்தகத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு திரும்புவார். அங்கிருந்து மாலை 5:05 மணிக்கு சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்ப உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஜனவரி 20-ஆம் தேதி காலை, எஸ்பிஜி குழு சென்னை விமான நிலையத்திற்கு வந்து விரிவான ஆய்வு மேற்கொண்டது. சிறப்பு விமானங்கள் நிறுத்தப்படும் இடம், ஹெலிகாப்டர் தரையிறங்கும் மண்டலம், பாதுகாப்பு அதிகாரிகளின் பணியமர்த்தல் திட்டம் உள்ளிட்டவற்றை கூட்டத்தில் ஆராய்ந்தது.

ஜனவரி 20 முதல் 23 வரை நான்கு நாட்களுக்கு பழைய சென்னை விமான நிலையம் விரிவான பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஆய்வுக்குப் பிறகு, எஸ்பிஜி குழு மதுராந்தகம் சென்று பொதுக்கூட்ட இடம் மற்றும் தரையிறங்கும் பகுதிகளையும் ஆய்வு செய்தது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்த பொதுக்கூட்டம் என்டிஏவின் வெற்றி பாதையை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. DMK ஆட்சியை வீழ்த்துவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக இது அமையும் என BJP தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக சட்டசபைக்கு ஏப்.,10-க்குள் தேர்தல்!! பிப்.,-யில் வெளியாகுது அறிவிப்பு!! பத்திக்கிச்சு எலெக்‌ஷன் ஜுரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share