×
 

மதுராந்தகத்தில் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. போலீஸ் குவிப்பு, போக்குவரத்து மாற்றம்!

மதுராந்தகத்தில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் அனலைப் பறக்கவிடும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சென்னை வருகிறார். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரதமருடன் ஒரே மேடையில் தோன்றும் இந்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, இன்று மதியம் 1:15 மணிக்குத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 2:15 மணிக்கு மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையைச் சென்றடைகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, டெல்லியிலிருந்து வந்துள்ள மத்தியப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சுமார் 15,000 தமிழகக் காவலர்கள் மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியின் ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கியத் தளமாக இந்த மதுராந்தகம் மேடையை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதால், ஜி.எஸ்.டி சாலையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை வழித்தடங்களில் செல்லும் கனரக வாகனங்கள் கிழக்குக் கடற்கரை சாலை (ECR), திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வந்தவாசி ஆகிய மாற்றுப்பாதைகளில் செல்ல வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை ஜி.எஸ்.டி சாலையில் வரும் பேருந்துகள் அனைத்தும் கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் சென்னைக்குத் திருப்பி விடப்படும். சென்னையிலிருந்து திண்டிவனம் செல்வோார் வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் சென்றடையலாம் அல்லது ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாகச் செல்லலாம். இருப்பினும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் எந்தவிதத் தடையுமின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் வர்ற நேரத்துல இப்படி ஒரு ரகளையா? மாவட்டத் தலைவர் கார் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை!

இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு போவாருன்னு தெரியும்.. வெட்டத்தான் ஆடு வாங்குறாங்க! தினகரனை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா.. !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share