தந்தை - மகன் மோதல் உச்சகட்ட பரபரப்பு..!! டிசம்பர் 29-ல் பாமகவின் கூட்டணி அறிவிப்பு!
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என பாமக கௌரவத் தலைவர் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த தகவல்களைப் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் பதவி குறித்து மோதல் வலுத்துள்ள நிலையில், ஜி.கே.மணியின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.மணி, "சேலத்தில் டிசம்பர் 29-ஆம் தேதி பாமக-வின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் விதமாகவும், 2026-ஐ வரவேற்கும் விதமாகவும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற ‘மெகா’ அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார். இதுவரை அதிமுக-வோ அல்லது பாஜக-வோ எங்களிடம் கூட்டணி குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால், ராமதாஸ் இருக்கும் கூட்டணிதான் 2026-ல் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமரும் என்பது உறுதி என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கட்சியின் தலைமைப் பிரச்சனை குறித்துப் பேசிய அவர், "அன்புமணி ராமதாஸ் தன்னைத் தலைவர் என்று கூறிக்கொள்வது அபத்தமானது. அவரது பதவிக்காலம் கடந்த மே மாதமே முடிந்துவிட்டது. பாமக-வின் உண்மையான அடையாளம் ராமதாஸ்தான் என்று நீதிமன்றமே தெளிவுபடுத்திவிட்டது. தன் தந்தையையே அவமானப்படுத்தும் வகையில் அன்புமணி பேசுவது கண்டனத்திற்குரியது. அன்புமணியை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். இதைக் கண்டு மருத்துவர் ராமதாஸ் வேதனையில் கண்கலங்குகிறார். சேலம் பொதுக்குழுவில் 4,200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்; அங்கு ராமதாஸின் கைதான் ஓங்கியிருக்கும் என்பதை உலகம் பார்க்கும். மாம்பழச் சின்னம் ராமதாஸ் தலைமையிலான பாமக-விற்கே உறுதியாகக் கிடைக்கும்" என ஆவேசமாகப் பதிலளித்தார். தந்தை-மகன் இடையேயான இந்த மோதல், வரும் டிசம்பர் 29-ஆம் தேதி ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல்: பாமக-வில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!
இதையும் படிங்க: என்எல்சி CSR நிதிக் முறைகேடு: நெய்வேலி மக்கள் புறக்கணிப்பு - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!