#BREAKING: “அரசியலில் இருந்து விலகுகிறேன்”..! பாமகவில் தலைமுறை மாற்றம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!
அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான உறவு தமிழ்நாட்டு அரசியலில் நீண்டகாலமாக கவனம் பெற்ற ஒன்று. கட்சியின் வளர்ச்சியில் இருவரும் முக்கிய பங்கு வகித்தாலும், கட்சித் தலைமை மற்றும் அதிகாரப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனை பல மாதங்கள் நீடித்து, கட்சியின் உள்ளாட்சி அமைப்புகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த இணைப்பு இந்தப் பிளவுக்கு முடிவு கட்டியது.
கட்சியின் தீர்மானங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழத் தொடங்கின. பிரச்சனை தீவிரமடைந்தது 2025-ல். அன்புமணி கட்சித் தலைவராக இருந்த நிலையில், ராமதாஸ் தனது மகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். அன்புமணியின் சில செயல்பாடுகளை "கட்சிக்கு எதிரானவை" எனக் குற்றம் சாட்டிய ராமதாஸ், தானே கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பதாக அறிவித்தார். இந்த நடவடிக்கை கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கைகளை வெளியிட்டனர். சட்டப்பூர்வ நடவடிக்கைகள், உயர் நீதிமன்றத் தலையீடு எனப் பிரச்சனை விரிவடைந்தது. கட்சியின் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் பிற அரசியல் நகர்வுகளில் இந்தப் பிளவு தெரியும் வகையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் காலகட்டத்தில் அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட முயன்றார். ராமதாஸ் தரப்பு கட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிபூர்வமான அறிக்கைகள் வெளியாகின. தந்தை-மகன் உறவு அரசியல் களத்தில் பாதிக்கப்பட்டதால், பல ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த நீண்ட பிரச்சனைக்கு 2026 ஜூன் மாதத்தில் முடிவு கட்டப்பட்டது. ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி அம்மாளின் 61-வது திருமண நாள் விழாவின்போது தைலாபுரம் தோட்டத்தில் இருவரும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு உணர்ச்சிபூர்வமாக இருந்தது
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இனிமேல் பாமக விவகாரங்களில் தலையிட மாட்டேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக பணிகளை இனிமேல் அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் வந்தால் கூட நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றோம். அரசியல் குறித்து பேச மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் குறித்து பேசவும் மாட்டேன் அரசியலில் வழிகாட்டவும் மாட்டேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அரசியல் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது 88 ஆவது பிறந்த நாளை இன்று அவர் கொண்டாடும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையிலான மோதல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் அரசியலை விட்டு விலகியுள்ளார் ராமதாஸ்.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!