பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! முக்கிய குற்றவாளி முகமது அலி ஜின்னா கைது!!
பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்து, தேடப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 2019-ஆம் ஆண்டு திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், ஐந்து ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து, தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கியக் குற்றவாளி முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு நபரையும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த அனைத்துக் குற்றவாளிகளையும் என்.ஐ.ஏ. அமைப்புக் கைது செய்துள்ளது. பா.ம.க. பிரமுகரான ராமலிங்கம், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் கொடுத்தவர் ஆவார். இதன் காரணமாக, 2019 பிப்ரவரி 5-ஆம் தேதி மர்ம நபர்களால் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் திருவிடைமருதூர் ரஹ்மான் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில், தடை செய்யப்பட்ட அமைப்பான PFI-யின் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தலைவரான முகமது அலி ஜின்னா மிக முக்கியமானவர். ராமலிங்கம் கொலையின் சதித் திட்டத்திலும், பிற குற்றவாளிகளை ஒருங்கிணைத்துத் திட்டமிட்டதிலும் முகமது அலி ஜின்னா முக்கியப் பங்கு வகித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: கோவா நைட் கிளப் தீ விபத்து சம்பவம்: தாய்லாந்து தப்பிய விடுதி ஓனர்கள் அதிரடி கைது..!!
முகமது அலி ஜின்னா, கும்பகோணம் அப்துல் மஜீத், பாபநாசம் புர்ஹானுதீன், திருவிடைமருதூர் சாகுல் ஹமீது மற்றும் நபீல் ஹாசன் ஆகியோரை என்.ஐ.ஏ. தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்ததுடன், அவர்கள் பற்றித் தகவல் தெரிவிப்போருக்குத் தலா ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி முகமது அலி ஜின்னாவை, தமிழகக் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ATS) அளித்த தகவலின் பேரில் தேசியப் புலனாய்வு முகமை அமைப்பு இன்று கைது செய்தது. மேலும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அஸ்மத் என்ற மற்றொரு நபரையும் என்.ஐ.ஏ. கைது செய்தது.
இந்தக் கொலைக்குப் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதன் விரிவான திட்டமிடல் குறித்து தேசியப் புலனாய்வு முகமை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன்மூலம், வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அனைத்து முக்கியக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் கைது! இ.பி.எஸ். கடும் கண்டனம்!