அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!
அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள் என்று கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார் ராமதாஸ்.
சேலம் மாவட்டத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நீடித்து வரும் உட்கட்சி பிளவு இந்தத் தேர்தல் களத்தை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி உரிமை, சின்னம் உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாகத் தொடர்கிறது.
இரு தரப்பினரும் தங்களுக்கே கட்சி சொந்தம் என வாதிட்டு வருகின்றனர். அன்புமணி தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. அவர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்புமணி அணி 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அவரது மனைவி சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ராமதாஸ் தரப்பு கட்சி மற்றும் சின்னத்தை மீட்க சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் அவை பலனளிக்காததால், அடுத்தகட்ட நகர்வாக சசிகலா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் தீவிரமடைந்தது. சசிகலா பல இடங்களில் அனல் பறக்க பிரசாரம் செய்து வந்த நிலையில், ராமதாஸும் ஏப்ரல் 12-ம் தேதி முதல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இதையும் படிங்க: ஐயா ராமதாஸ் நலமுடன் இருக்கிறார்..!! மருத்துவர் சொன்ன ஆறுதல் தகவல்..!!
அதன்படி, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் இரா. அருளை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராமதாஸ், உரையாற்றி முடித்து மேடையிலிருந்து இறங்கியபோது திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரது நிலைமை கருதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 86 வயதான ராமதாஸின் உடல்நலக் குறைவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாரத்திற்கு செல்ல முடியாத சூழலில், ராமதாஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தற்போது அன்புமணி தலைமையில் போட்டியிடும் அணியை கடுமையாக விமர்சித்தார். “என் மகன் தலைமையிலான அணி மக்கள் சேவைக்காக அல்ல, அதிகாரம் கிடைத்தால் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். தான் வளர்த்த பிள்ளைகள் பணத்துக்காக அணி மாறி, கொள்கையற்ற துரோகக் கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே தன் போதனை என்றும், ஆனால் அன்புமணி அதை பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன்படுத்த நினைப்பதாகவும் விமர்சித்தார்.மேலும், அன்புமணி நாடாளுமன்ற அமர்வுகளுக்கு மிகக் குறைந்த நாட்களே சென்றிருப்பதாகவும், மக்கள் பிரச்சினைகளை எதிரொலிக்காமல் பின்னணியில் இருந்து அதிகாரத்தைத் தேடுவதாகவும் கூறினார்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்புமணி தனது தந்தையின் உடல்நலக் குறைவு நேரத்தில் கூட நலம் விசாரிக்காதது, பிறந்தநாள், திருமண நாள் போன்ற சந்தர்ப்பங்களில் கூட கடமையைச் செய்யாதது போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, “இது அவரது துரோக மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” என்றார். அன்புமணி அணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராமதாஸ், “இவர்கள் சட்டமன்றத்துக்குச் சென்றால் மக்கள் பிரச்சினைகளுக்காகப் பேச மாட்டார்கள்; பணம் சம்பாதிக்கும் வித்தையைத்தான் காட்டுவார்கள்” என்று எச்சரித்தார்.
எனவே, உண்மையான மக்கள் சேவையில் ஈடுபடும் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ செய்தி பா.ம.க.வின் உட்கட்சி பிளவை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் ராமதாஸின் உடல்நலம் விரைவில் தேற வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!