பாமக பிரமுகர் ராமலிங்கம் வழக்கில் திகில் திருப்பம்... முக்கிய குற்றவாளிகளை தட்டித்தூக்கிய என்.ஐ.ஏ...!
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் NIA வால் தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ராமலிங்கம் (45) அப்பகுதியில் இஸ்லாம் மதமாற்றம் குறித்து பிரசங்கம் செய்தவர்களை தட்டிக்கேட்டதால் கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி - 5 ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு 18 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அதில் 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற அனைவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகுடியை சேர்ந்த முகமது நஃபீல் ஹாசன் (35) மற்றும் வடமாங்குடி பகுதியை சேர்ந்த புர்ஹானுதீன் (34) ஆகியோர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் செல்ல இருப்பதாக சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கும், தேசிய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல் துறையினரின் உதவியுடன் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த டாடா டிகோ காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் (33) மற்றும் அப்பாஸ் (30) ஆகிய இருவரும் தேடப்படும் கொலை குற்றவாளிகளான முகமது நஃபீல் ஹாசன் மற்றும் புர்ஹானுதீன் ஆகிய இருவரையும் காரில் ரகசியமாக அழைத்து சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு..!! சிக்கிய 8வது நபர்..!! NIA அதிரடி..!!
இதனை அடுத்து 4 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்த IB காவல் துறையினர் அவர்களை பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் நான்கு பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், IB மற்றும் எஸ்ஐயூ அதிகாரிகள் சுமார் 11 மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, அவர்களின் உடைமைகளை பரிசோதித்தனர். அதனை தொடர்ந்து இவர்களை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள NIA அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த காவல் துறை பாதுகாப்போடு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: மணிப்பூர் வன்முறை விவகாரம்... NIA- வுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு...!