பாமக ராமதாஸுக்கு மட்டுமே.. அன்புமணிக்கு கட்சியில் உரிமையில்லை - ஜி.கே. மணி அதிரடி
பா.ம.க. தலைமை விவகாரத்தில் ராமதாஸுக்குச் சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்துள்ளதால், அன்புமணியால் சின்னத்தை உரிமை கோர முடியாது என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் அன்புமணியைத் தலைவராக அங்கீகரித்ததைக் கண்டித்து, பா.ம.க. சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (வியாழக்கிழமை, டிசம்பர் 4) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பா.ம.க. உரிமை கோரல் விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வழக்கில் ராமதாஸுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், பா.ம.க.வின் தலைவர் அன்புமணி என்று இனி கூற முடியாது. மேலும், பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மாம்பழம் சின்னம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதுவும் செல்லாதது ஆகிவிட்டது.
2022 முதல் 2025 வரை மட்டுமே அன்புமணிக்கு பதவிக்காலம் இருக்க வேண்டும். ஆனால், அவர் 2023 முதல் தனது பதவிக்காலம் தொடங்குவதாகக் போலியான ஆவணத்தைத் தயார் செய்து தேர்தல் ஆணையத் துணையோடு 2026 வரை தலைவர் பதவி இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ராமதாஸ் Vs அன்புமணி: யாருக்கு பாமக? வழக்கை முடித்து வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!
தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், அன்புமணியின் ஆவணங்கள் செல்லாது எனவும், அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் தான் அவரைத் தலைவர் என்று கூறியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது ராமதாசுக்குக் கிடைத்த வெற்றி என்றும் ஜி.கே.மணி கூறினார்.
தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யக் கூடாது. மருத்துவர் அன்புமணிக்குத் தேர்தல் ஆணையம் துணை போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். முன்பு வாக்குத்திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கட்சித் திருட்டிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் 46 ஆண்டுகாலம் உழைத்து வளர்த்த பா.ம.க-வை அவரிடம் இருந்து திருடி அன்பு மனைவியிடம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. ஒருதலைபட்சமாகச் செயல்படுவதைத் தவிர்த்து விட்டு நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை: பா.ம.க-வுக்கு யார் தலைவர் என்பதை உறுதி செய்ய உரிமைகள் நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!