அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, வி.கே. சசிகலா இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முக்கியக் கட்சிகள் உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சசிகலா அவர்கள் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவரை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வரவேற்று, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தனியாக ஆலோசனை நடத்தினார்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எதிராகத் தனது ஆதரவாளர்களைத் திரட்டி வரும் சசிகலா, 2026 தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பாமக - அதிமுக கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ராமதாஸை சசிகலா சந்தித்திருப்பது எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளையும் தவிர்த்து, ஒரு மூன்றாவது அல்லது வலுவான மாற்று அணியை உருவாக்குவது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் சசிகலாவின் பலத்தையும், வட மாவட்டங்களில் பாமகவின் பலத்தையும் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டிருக்கலாம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒருபுறம் அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், நிறுவனர் ராமதாஸ் சசிகலாவைச் சந்தித்திருப்பது அக்கட்சியின் இறுதி முடிவை இன்னும் புதிராகவே வைத்துள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்காமல் சசிகலா கிளம்பிச் சென்றாலும், "நல்ல முடிவுகள் விரைவில் வெளியாகும்" எனப் பாமக வட்டாரங்கள் சூசகமாகத் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!