பொங்கலோ பொங்கல்!! மோடி முதல் சிங்கப்பூர் பிரதமர் வரை!! தமிழில் வாழ்த்து சொன்ன உலகத் தலைவர்கள்!
பொங்கலை முன்னிட்டு பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் ஆகியோர் மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: “எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! தங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்தப் பண்டிகை உழைப்புக்கும் இயற்கைக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை நமக்கு நினைவூட்டுகிறது. விவசாயிகளின் கடின உழைப்பு, கிராம வாழ்க்கை, பாரம்பரிய உணவுகள், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை இந்தத் திருநாள் கொண்டாடுகிறது.
தமிழ் பாரம்பரியத்தின் அழகிய அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா இருப்பதில் பெருமை கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இந்தப் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க: 48 மணி நேரம் தான்! End card போட்டது வடகிழக்கு பருவமழை!! இன்று எங்கெல்லாம் மழை!
இந்த தைத்திருநாள் அனைவருக்கும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி, நல்ல ஆரோக்கியத்தைத் தரட்டும்!” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சமூக வலைதளத்தில் “பொங்கலோ பொங்கல்” என்று தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
“பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கல் என்பது தமிழ் மக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா. இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் ஒன்றிணைந்து பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளின் தலைவர்களின் தமிழ் வாழ்த்துகள் தமிழக மக்களிடையேயும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையேயும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மெரினா பீச்சில் குப்பை போட்டால் ரூ.5000 பைன்!! கறார் காட்டும் சென்னை மாநகராட்சி!! அதிரடி உத்தரவு!