ஆக.1ம் தேதி முதல்.. தபால் கட்டணத்தில் முக்கிய மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.
இந்திய அஞ்சல் துறை முதல் முறையாக ‘ஆவணம்’ மற்றும் ‘பார்சல்’ ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளை வெளியிட்டுள்ளது. இதனுடன் 24 மணி நேர மற்றும் 48 மணி நேர விரைவு தபால் சேவைகளுக்கான புதிய கட்டண அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வருகிற ஆகஸ்ட் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய வரையறையின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள், அச்சிடப்பட்ட ஆவணங்கள், வாழ்த்து அட்டைகள், ராக்கி உறைகள் (500 கிராம் வரை) ஆகியவை ‘ஆவணம்’ பிரிவில் வரும். வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், கணக்கு அறிக்கை, டெபிட்-கிரெடிட் கார்டுகள், பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அரசு மற்றும் நிதி ஆவணங்களும் இதில் அடங்கும். இவற்றைத் தவிர வணிகப் பொருட்கள், மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் ‘பார்சல்’ பிரிவில் வகைப்படுத்தப்படும்.
பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக ‘24 விரைவு தபால்’ மற்றும் ‘48 விரைவு தபால்’ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய ஆறு பெருநகரங்களுக்கு இடையே மட்டுமே கிடைக்கின்றன. 24 விரைவு தபால் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். 48 விரைவு தபால் மூலம் 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: 41 இடங்களில் ரெய்டு..! சாட்டையை சுழற்றும் விஜய் அரசு..! பரபரக்கும் தமிழகம்..!!
பொதுமக்களுக்கு 24 விரைவு தபால் கட்டணம் எடை மற்றும் தூரத்தைப் பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை (ஜிஎஸ்டி தவிர). 50 கிராமுக்குக் குறைவான பொருளை உள்ளூருக்கு அனுப்ப ரூ.38, நாடு முழுவதும் அனுப்ப ரூ.94. 51-250 கிராமுக்கு ரூ.118-154, 251-500 கிராமுக்கு ரூ.140-186. 48 விரைவு தபால் கட்டணம் ரூ.61 முதல் ரூ.121 வரை. மொத்த வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர சேவை ரூ.38-100, 48 மணி நேர சேவை ரூ.48-72 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் ஆவணங்களைக் குறைந்த கட்டணத்தில் அனுப்பவும், பார்சல்களைத் தனித்தனியாக வகைப்படுத்தவும் வசதி கிடைக்கும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தபால் நிலையங்களில் சரியான பிரிவில் பதிவு செய்வது முக்கியம்.
இதையும் படிங்க: ரவுடி கொலையில் இளம் பெண் கைது... குடும்பமே சேர்ந்து செய்த சதி... ‘மனைவிகளுக்கு’ வலைவீச்சு...!