×
 

பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமலுக்கு வரும் போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமலுக்கு வரும் போது, பெண்களின் பிரதிநிதித்துவம் பெருமளவில் அதிகரித்து அவர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு விரைவில் கிடைக்கும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் 32-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இச்சிறப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டம் பெற்ற இளம் மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாணவிகளிடையே உரையாற்றிய அமைச்சர் விஸ்வநாதன், ஒரு காலத்தில் 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு' என்ற பிற்போக்குத்தனமான குரல்கள் சமுதாயத்தில் ஒலித்தன. ஆனால், அதை பொய்ப்பிக்கும் வகையில் இன்று பெண்கள் உலகையே ஆளும் மாபெரும் சக்தியாக உயர்ந்து நிற்கின்றனர். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, தொழிலதிபர் இந்திரா நூயி மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போன்ற ஆளுமைகளின் வரிசையில், இன்று பட்டம் பெற்று வெளியேறும் இளைய தலைமுறை மாணவிகளும் சாதனை படைக்க வேண்டும் என்று ஊக்கமளித்துப் பேசினார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

பெண்களுக்கான உரிமை வரலாற்று குறித்துப் பேசிய அவர், 1984 மற்றும் 1991 காலகட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட வரலாற்று நிகழ்வை நாம் நினைவுகூர வேண்டும். பெண்களுக்குச் சுயமரியாதையைக் கற்றுக்கொடுத்தது தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் ஆவர்; பெண்களுக்கு உண்மையான அதிகாரத்தை வழங்கியது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார். எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் 33% இடஒதுக்கீடு முழுமையாக அமலுக்கு வரும் போது, இந்திய நாடாளுமன்றத்தில் சுமார் 179 பெண் உறுப்பினர்களும், தமிழகச் சட்டமன்றத்தில் 77 பெண் உறுப்பினர்களும் அடியெடுத்து வைக்கும் வரலாற்று நிலை உருவாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜெயின் சமூகம் கல்வி வழங்குவதிலும், சமூகத்திற்குப் பகிர்ந்தளிப்பதிலும் இந்தியாவில் முதன்மையாகத் திகழ்கிறது எனப் பாராட்டு தெரிவித்த அமைச்சர், பட்டம் பெற்றுச் செல்லும் மாணவிகள் தங்களின் அறிவையும் தனித்துவமானத் திறமையையும் சமுதாய வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பட்டம்பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share