விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!
2025-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் 6 மாதத்தில் SIR நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் (SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஏழைகள், பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்கும் பேராபத்தில் இறங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், "நாட்டில் பிரம்மாண்டமாக விநாயகரைக் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது; அடுத்ததாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கரைக்க வேண்டும்" என்று மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்; மேலும், 2025 ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு, வெறும் 6 மாதங்களிலேயே எதற்காக அவசர அவசரமாக ஒரே மாதத்திற்குள் SIR பணிகளை முடிக்க வேண்டும் என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் மத்திய பாஜக அரசின் போக்கை மிகக் கடுமையாகத் தோலுரித்துப் பேசினார்; அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
"நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல; ஆனால் வாக்குரிமை என்பது நமது குடியுரிமை, நமது தன்மானம் தொடர்பானது. வரலாற்றிலேயே இல்லாத வகையில் மக்கள் தேர்தல் ஆணையப் படிவங்களை நிரப்ப வரிசையில் நிற்கும் அவலம் இப்போதுதான் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் புதுப்பித்து பிப்ரவரியில் வெளியிடுவது வழக்கம். ஆனால் 2025-ல் அவ்வாறு செய்த பிறகு, 6 மாதத்திற்குள் SIR செய்ய என்ன அவசியம் வந்தது? வெளிநாட்டிலிருந்து ஊடுருவி விட்டார்கள் என்கிறார்கள்; அப்படியானால் நீக்கப்பட்ட 13 கோடி பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களா? இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது."
இதையும் படிங்க: SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு, பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கொண்ட குழுவாக மோடி அரசு மாற்றியது. திருடப் போவது தெரிந்து உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டதைப் போலத் தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தைக் கையாளுகிறார்கள். ரங்கா - பில்லா (மோடி - அமித்ஷா) பேச்சைக் கேட்டுக்கொண்டு திருடன் ஞானேஷ்குமார் செயல்படுகிறார்.
மோடியின் தேர்தல் பிரச்சாரத் திட்டத்திற்கு ஏற்பவே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன. 13 கோடி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; மனித உயிர்கள். அவர்களின் வாக்குரிமையைப் பறித்து 13 கோடி பேரைக் கொலை செய்துள்ளார்கள்; இவர்களைச் சும்மா விட்டுவிடலாமா?"
"கர்நாடகாவில் 5.5 கோடி வாக்காளர்களில் 1.8 கோடி பேருக்குத் திருத்தம் என்றார்கள்; நானும் எனது நண்பர்களும் நேரில் சென்று 100 வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தோம். அங்கு 16 லட்சம் பேர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள்; ஆனால் மாநில அரசின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி ஆண்டுக்கு 4 லட்சம் பேர்தான் இறக்கிறார்கள். பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளிடம் ஆவணங்கள் இல்லை எனக் கூறி நீக்குகிறார்கள். பெங்களூருவின் ஒரு பகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் 200 வாக்காளர்களை நீக்க மனு கொடுத்துள்ளார்; அவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள். நாட்டினை இரண்டாகப் பிரிக்க நினைக்கிறார்கள்; வாக்குரிமை உள்ளவர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாதவர்கள் எனப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள்."
"சுதந்திரத்திற்காகப் போராடியதைப் போல மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடினால் மட்டுமே வாக்குரிமையைப் பாதுகாக்க முடியும். எஸ்.ஐ.ஆர் என்பது நமக்கு எதிரான கொடூர ஆயுதம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். மோடி, அமித்ஷா மட்டுமல்லாது தமிழ்நாடு முதலமைச்சரையும் சேர்த்தே நான் கேட்கிறேன்; ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கிறீர்கள்? ஊடகங்களைத் தவிர்ப்பதன் மூலம் மக்களை அவமானப்படுத்துகிறீர்களா? செய்தியாளர்களின் கேள்விகள் அவர்களின் தனிப்பட்ட கேள்விகள் அல்ல; மக்களின் குரல். அதற்குப் பதிலளிக்க வேண்டியது ஆள்பவர்களின் கடமை" என்று மிக ஆவேசமாகப் பேசினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், 2023-க்குப் பிறகு தேர்தல் ஆணையம் எடுத்த சட்டவிரோத முடிவுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை, தேசிய அளவிலும் தமிழக அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: SIR விவகாரம்! அக்டோபர் 15-ல் சென்னையில் இந்தியா கூட்டணி மெகா போராட்டம்! முதல்வர் விஜய்க்கும் அழைப்பு?!